
மதுரை-தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சேரன். படத்தை பற்றி சில வரிகள் பேசியவர், “இந்த படம் வெற்றி பெற எல்லாம் வல்ல சினிமாவை வணங்குகிறேன்” என்றார். (நாத்திகராகிவிட்டாரோ?) விழாவில் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் “மதுரைன்னாலே ஹிட்டுன்னு ஆயிருச்சு. இப்படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ மற்றும் முக்கிய கலைஞர்கள் எல்லாருமே மதுரைதான். அது மட்டுமல்ல, இந்த படத்திலே தேனியும் இருக்கு. இங்கே வந்திருக்கிற சேரன், கஞ்சா கருப்பு இரண்டு பேரும் தேனியை சேர்ந்தவங்க. வெற்றிக்கு கேட்கணுமா என்ன?” என்றார். அப்படியே அவர் சொன்ன இன்னொரு விஷயத்திற்குதான் கைதட்டல் ஓவர்.
“வழி ஆண்டிப்பட்டின்னு போட்டிருக்காங்க. அது எப்படிப்பட்ட ஊருன்னு உங்களுக்கெல்லாம் நான் சொல்லிதான் தெரியணும்னு இல்லே” என்றார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வெற்றி பெற்ற தொகுதி இது என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் விய்ய்ய்ய்...என்று விசில் அடிக்காத குறை! படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று எல்லாரையும் கவர்ந்தது. மதுரை வீரன் படத்தில் வரும் ஏய்த்து பிழைக்கும் தொழிலே சரிதானா பாடலின் மெட்டை அப்படியே சுட்டிருந்தார் இசையமைப்பாளர் ஜெ.பி. படமாக்கிய விதமும், நடன அமைப்பும் “பின்னிட்டாய்ங்களேப்பா...” சொல்ல வைத்தது.
கலகலப்பாக துவங்கிய விழா, ஒரு கட்டத்தில் நெகிழ்ச்சியாக முடிந்தது. மதுரையை சேர்ந்த மெல்லிசை குழுக்களில் பாடி வந்த சம்சுதீன் என்ற பார்வையற்றவரை மேடைக்கு அழைத்தார்கள். “இந்த படத்தில் வரும் டைட்டில் பாடலை பாடியிருப்பது இவர்தான். குரலை கொஞ்சம் கேளுங்களேன்” என்றார் டைரக்டர் ரதி பாலா. தனது கணீர் குரலால் மொத்த கூட்டத்தையும் கட்டி போட்டார் சம்சுதீன். “இவரை இந்த படத்திலே பயன்படுத்திக் கொண்டதற்கு நாங்கதான் பெருமைப்படணும்” என்ற ரதி பாலாவின் பேச்சு உள்ளபடியே நியாயமானதுதான்!
0 comments