
சென்னை [^]: வாரத்துக்கு மூன்று படங்கள் மட்டுமே இனி ரிலீஸ் ஆக வேண்டும், பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே வெளியாக வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் [^] ராம நாராயணன் விடுத்துள்ள அறிக்கை:
"கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அதிக தமிழ் [^] படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் ஏறக்குறைய 100 நேரடி தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் உள்ள நான்கு மாதங்களில் வெளியிட நிறைய படங்கள் தயாராகி வருகின்றன.
இதனால் படங்களை திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் அவதிப்படுகிறார்கள். பின்னர் கிடைத்த தியேட்டர்களில் வெளியிட்டு அசல் கூட கிடைக்காமல் களைப்படைகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
தமிழக முதல்வரும், கலைத்தாயின் பிதாமகனுமான கலைஞர் [^] திரையுலகிற்கு அளித்த கேளிக்கை வரிவிலக்கு பயனை முழுமையாக அடைய முடியாமல் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
மேலும் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியும், பெரிய நடிகர்கள்-நடிகைகள், இயக்குனர்கள் பங்குபெற்ற பெரிய பட்ஜெட் [^] படங்களை கீழ்க்கண்டபடி 'ரிலீஸ்' செய்ய வேண்டும்.
பொங்கல், ஜனவரி-26, ஏப்ரல்-14, மே-1, ஆகஸ்டு-15, தீபாவளி ஆகிய விழாக்கால தினங்களில் மட்டுமே அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் படங்களை `ரிலீஸ்' செய்யவேண்டும். மற்ற நேரடி திரைப்படங்களை வாரத்திற்கு இரண்டும், மொழிமாற்று (டப்பிங்) படம் ஒன்றும் தான் 'ரிலீஸ்' செய்யவேண்டும். 2009 அக்டோபர் மாதம் தீபாவளி முதல் தயாரிப்பாளர்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
படம் தயாரிப்பது மட்டுமல்ல, அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் தயாரிப்பாளர்களின் கடமையாகும்.
ஆகவே, இந்த சுயகட்டுப்பாடு திட்டத்தை தயாரிப்பாளர்கள் தங்கள் நலனுக்காகத்தான் என்ற எண்ணத்தில் பணியாற்றி படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இது விஷயமாக விரிவாக தெரிந்துகொள்வதற்கு சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம், என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் ராம நாராயணன்.
0 comments