
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் நினைவலைகள் என்ற பெயரில் நடந்து வந்த நாடக விழா நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பழம் பெரும் நடிகைகள் அஞ்சலிதேவி, எம்.என்.ராஜம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
நிறைவு விழாவுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி அனைவரையும் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், நடிகர் சங்க பெண் தலைவராக பதவி வகித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவிக்கும், முதல் பெண் உறுப்பினர் நடிகை எம்.என்.ராஜத்துக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். பிறகு மேடையில் பேசிய அவர்,
“தி.நகரில் நமக்கு 18 கிரவுண்ட் நிலம் இருக்கிறது. தங்க தட்டில் தேங்காயை வைத்திருப்பது போல் இதை வைத்திருக்கக் கூடாது. இங்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசிடம் கேட்டால் முதல்வர் அதனை செய்து கொடுப்பார். இங்கு நவீன வசதிகளுடன் இசை அரங்கம் ஒன்றை அமைத்து நாடகம், விழா என்று நடத்தினால் நிறைய வருமானம் வரும்” என்றார்.
நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க பாடுபட்ட விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு ரஜினி நன்றி தெரிவித்துக் கொண்டார். சங்கத்தின் வளர்ச்சிக்கான எந்தவொரு செயலும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினி குறிப்பிட்டார்
0 comments