
தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தவர் ஷோபனா. கலைத்துறையில் பிரகாசிக்கும் போதே மெல்ல அதிலிருந்து விலகி நாட்டியத்தில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார். இவரது தலைமையின் கீழ் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் நாட்டிய பள்ளிகள் இயங்கி வருகிறது. இவரது மாயா ராவண் என்ற நாட்டிய நிகழ்ச்சி முதன் முதலாக டி.வி.டி வடிவத்தில் வெளியிடப்படுகிறது. ஷமாரோ என்ற நிறுவனம் இந்த பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.
பின்பு கமல் பேசியவதாவது-
நான் ராவணனின் ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். தமிழக கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆன்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திலிருந்தே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால்தான் உண்டு. சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை அவர் இருக்கும் போதும் கிடைக்கவில்லை. இது பற்றி நானும் பிரபுவும் பலமுறை பேசியிருக்கிறோம்.
கலையும் கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் போல. இரண்டும் கலக்காது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா நல்ல சமையல்காரர். அவர் ராவணாவை படைத்தது போல நரகாசுரனையும் தனது நாட்டியத்திற்குள் கொண்டு வர வேண்டும். இங்கு செல்விகள் நாட்டியம் ஆடினார்கள். அதை பார்த்ததும் எனக்கு போன ஜென்மத்தில் இருந்தது போல தோன்றியது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதை இல்லாதவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும், பணிவும் என்னிடம் இருக்கிறது. வைரத்தை தோண்டி எடுப்பதை போல திறமையை தோண்டி எடுக்க வேண்டும். ஷோபனா ஒரு வைரம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக நன்றி கூறிய ஷோபனா, சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக கனிமொழி எம்.பி க்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
0 comments