இருபத்தியேழு வருடங்களுக்கு முன் வந்த படம் பாலைவனச்சோலை. சந்திரசேகர், சுஹாசினி நடித்த அந்த படம் இப்போது ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியே காப்பி அடிக்காமல் இந்த காலத்திற்கேற்ப ஏராளமான மாற்றங்களை செய்திருக்கிறாராம் படத்தின் இயக்குனர் எஸ்.தயாளன். உதாரணத்திற்கு ஒரு மாற்றத்தை சொல்லுங்களேன்? என்றோம்.


அந்த காலத்திலே வேலை கிடைக்கிறது குதிரை கொம்பு. ஆனா இப்போ அப்படியில்லே. ஏதாவது ஒரு வேலை குறைஞ்ச சம்பளத்துக்காகவாவது கிடைச்சிடுது. அப்படியிருக்கும் போது வேலை தேடி அலையுற மாதிரி ஒரு கேரக்டர் பழைய படத்திலே வருது. அதை மாற்றியிருக்கேன். இப்படி நிறைய சொல்லலாம் என்றார். பாலைவனச்சோலையில் ஹைலைட்டே மேகமே... மேகமே என்ற பாடல்தான். அதை என்ன செய்திருக்கிறாராம்?

அந்த ட்யூன், வரிகள் எல்லாம் அப்படியே இருக்கும். வாத்திய கருவிகளில் மட்டும்தான் கொஞ்சம் மாற்றம். இந்த பாடலை போலவே ஆளானாலும் ஆளு என்ற பாடலையும் அப்படியே வச்சிருக்கிறோம். மற்ற பாடல்களும் அப்படியே இருக்கட்டுமே என்றுதான் முதலில் யோசித்தோம். ஆனால் புதுசாக மூன்று பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்தார் இசையமைப்பாளர் பாபி. நன்றாக இருந்ததால் அதை பயன்படுத்தியிருக்கோம் என்றார் தயாளன்.

சுஹாசினி கேரக்டரில் திண்டுக்கல் சாரதி கார்த்திகாவும், சந்திரசேகர் கேரக்டரில் நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள். உங்களோடு சேர்ந்து நடிக்கிற ஹீரோயின்களுக்கெல்லாம் உடனே கல்யாணம் ஆயிடுதே எப்படி? என்று நிதின் சத்யாவிடம் கேட்டால், ஐய்யய்யோ சாமீய். இப்படியெல்லாம் எழுதி புரளிய கிளப்பிவிட்றாதீங்க. அப்புறம் ஜோடி சேரவே ஆளு கிடைக்காது என்றார் நிஜமான பயத்துடன். அப்படின்னா அதைதானே முதல்ல எழுதணும்...!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்