நடிப்பு : பிரிதிவ் ராஜ், ப்ரியாமணி, ஷக்தி, கார்த்திக், மனோபாலா, இளவரசு மற்றும் பலர்



இயக்கம் : ஜிஎன்.ஆர்.குமரவேல்



விமரிசனத்துக்குள் செல்லும் முன் தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தைத் திரும்ப எடுப்பதோ அல்லது தலைப்பை மட்டும் மறுபடியும் உபயோகப்படுத்துவதோ தவறில்லை. ஆனால் அதனை ஏற்கனவே எடுக்கப்பட்ட தரத்திலோ அதற்கும் மேலேயோ எடுத்திருக்கிறோமா என்று ஒருமுறை உங்கள் மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

மிகப் பிரபலமான தலைப்பு... அதனாலேயே இந்த வேண்டுகோளை இப்போதுசொல்ல வேண்டியிருக்கிறது.



எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தான் படித்த கல்லூரிக்கு வருகிறார் பிரிதிவ் ராஜ். பயணத்தின்போதே கல்லூரி நினைவுகள்..! நட்பான தோழர்கள், மோதிக் கொள்ளும் சகமாணவர்கள், அழகான காதலி, கலாட்டாவான தேர்தல் எல்லாம் கலந்ததுதான் முதல் பாதி. எவ்வளவு அழகான களம்? ஆனால், கமர்ஷியல் ஃபார்முலா என்னும் மாயவலைக்குள் சிக்கிக் கொண்டு தானும் குழம்பி நம்மையும் குழப்பிவிட்டார் டைரக்டர். எதுவுமே மனதில் ஒட்டவில்லை!



அதிலும் நினைத்த நேரத்தில் பாட்டுப் பாடுவதும், திருநங்கைகளின் அருகே உட்கார்ந்து படம் பார்த்து விட்டு அலறுவதும்... என்ன கொடுமை சார் இது! கதை 2000-ல் நடக்கிறது என்பதற்காக காட்சிகளையும் அந்தக்காலத்து படங்களில் இருந்தே சுடவேண்டுமா என்ன?



பழைய நினைவுகளோடு கல்லூரிக்கு வந்த பிரிதிவ் ராஜ் கழுத்துநெறிக்கப்பட்டு (டைரக்டர் சார்... கிடார் கம்பியால் கழுத்தை நெறித்தால் கழுத்து அறுபட்டுவிடாதோ?!) மயங்கி விழும்போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்கிறோம். இடைவேளைக்குப் பிறகு கதையின் ஓட்டம் கொஞ்சம் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் இத்தனை திருப்பங்களை வைத்துக் கொண்டு ஏன் முதல்பாதியை இத்தனை இழுத்தார்களோ தெரியவில்லை.



கல்லூரியில் நடந்த சம்பவங்களை ஒவ்வொருவராக பாக்யராஜிடம் விளக்குவதும் விட்ட இடத்தில் இருந்து கதை நகர்வதும் நல்ல உத்தி. அதைக் குழப்பாமல் சொன்னதற்காக டைரக்டரைப் பாராட்டலாம். அதேபோல், கதாநாயகியின் அப்பா எம்.எல்.ஏ-வாக இருந்தா லும் கடைசிவரை அவரையும் டாடா சுமோவில் வரும் அடியாள் கூட்டத்தையும் காட்டாமல் இருந்ததற்காக டைரக்டருக்கு நன்றி. ஆனால், சிக்ஸர் அடிக்கவேண்டிய பல இடங்களில் அரதப் பழசான காட்சிகளாலும் வசனங்களாலும் கடுப்பேற்றுகிறார்.



பிரிதிவ் ராஜ் பழைய மாணவர் போலத்தான் இருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவராக ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை. அதிலும் ஷக்தி அருகே பார்க்கும்போது ரொம்பவே சீனியராகத் தெரிகி றார். ஆனால், நடிப்பில் அதை பேலன்ஸ்செய்துவிடுகிறார்.



ஷக்தி இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. முதல் வேலையாக விஜய் போல தலையாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நடனங்களில் அவருடைய இளமை கொப்பளிக்கிறது. கிட்டத்தட்ட படம் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் தெரியவரும் அவருடைய காதலும், அது தொடர்பான காட்சிகளும் திடீர் ஜில்!



ப்ரியாமணி இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்பது போலவந்து போகிறார். டப்பிங் ரொம்பவே கொடுமையாக இருக்கிறது. உடம்பைக் கவனியுங்கள் அம்மணி...வெயிட் ஏறிக் கொண்டே போகிறது!



பாக்யராஜின் கதாபாத்திரம் நிறைவு. மகனுக்கு சிறு உடல்நலக் குறைவு வரும்போதே பதறுபவர், அவருடைய முடிவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் முதிர்ச்சி தெறிக்கிறது. வழக்கமான அவருடைய பாணி இல்லை என்றாலும் தன்னுடைய சீனியாரிட்டியை உணர்ந்து நடித்திருக்கிறார்.



வெண்ணிற ஆடை மூர்த்தி ரிட்டயர்ட் ஆகிவிட்டதால் அவர் இடத்தை மனோ பாலாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் புரொபசராக வந்து மாணவர்களிடம் லந்து படுகிறார். பார்க்கும் நமக்கு சலித்துவிட்டது... எடுக்கும் இயக்குனர்களுக்கு எப்போது சலிக் குமோ... ஆண்டவா!



படத்தில் வித்தியாசமான கோணங்களாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான வண்ணங்களாலும் உள்ளேன் ஐயா என்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்.



’என் பேரு அல்லா...” என்ற தன்னுடைய டிரேட் மார்க் குத்துபாடலோடு சில மெலடிகளையும் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.



சன் டிவியால் தியேட்டரில் கூட்டம் சேர்க்க முடிகிறது. ஆனால், அதை கட்டுப்படுத்திவசப்படுத்தி திருப்திப்படுத்தி அனுப்ப ஆளில்லை.



தலைப்பை எண்பதுகளில் எடுத்துக் கொண்டு கதையை மலையாளத்தில்இருந்து எடுத்துக் கொண்டு படத்தைக் கொடுத்தவர்கள், நமக்குக் கொடுத்திருப்பது கசப்பு மருந்து!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்