
இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட க்ரைம் நாவலை எழுதி கதை ஆர்வலர்கள் மத்தியில் ராஜாதிராஜாவாக வாழ்ந்து கொண்டிருப்பவர் ராஜேஷ்குமார். நாலு நாவல்கள் எழுதினால் போதும். இங்கு சினிமாவுக்கு தேவையான கதைகள் சகாய விலையில் கிடைக்கும் என்ற விளம்பர போர்டு வைத்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் மத்தியில், சினிமாவுக்கு கதையா? ஆளை விடுங்கப்பா என்று ஓடுகிற டைப் இவர். இப்படி ஒரு கசப்பான அனுபவம் எப்படி வந்தது? அவரே விளக்கினார்.
ஆரம்பத்திலே என்னை அணுகி சினிமாவுக்கு கதை எழுதுங்க என்று வந்தவர்கள் ஏராளம். அவர்களில் சிலர் சென்னைக்கு வாங்க. ஓட்டலில் ரூம் போட்டு தர்றோம். அங்கேயே உட்கார்ந்து கதையை உருவாக்கலாம் என்று அழைத்திருக்கிறார்கள். அப்படி சென்னைக்கு வந்தபோது கதையை கேட்டுவிட்டு முன் வரிசை ஆடியன்சுக்கு ஏற்ற மாதிரி இங்கே கொஞ்சம் மாற்றலாமே என்றார்கள். பிறகு, இந்த இடத்திலே இப்படி இருந்தா நல்லாயிருக்கும் என்று சொல்லி இன்னும் கொஞ்சம் மாற்றினார்கள். கடைசியாக பார்க்கும் போது அது என் கதையாகவே இல்லை.
இந்த வில்லங்கமே வேண்டாம் என்று நான் கோவைக்கே போய் விட்டேன். அதன்பின் யார் அழைத்தாலும் நான் சினிமாவுக்கு வருவதில்லை என்ற முடிவோடு இருந்துவிட்டேன். அந்த நேரத்தில்தான் அகராதி பட இயக்குனர் நாகா வெங்கடேஷ் என்னை சினிமாவுக்கு எழுத அழைத்தார். அவரிடம், நான் சென்னைக்கெல்லாம் வர முடியாது. இங்கே வந்து தங்கி கதையை டெவலப் பண்ணலாம்னா சொல்லுங்க. எழுதுறேன். இல்லைன்னா நான் சினிமாவுக்கே வரலே. ஆளை விடுங்க என்றேன். அவரும் கோவை அன்னபூரணா ஹோட்டலில் தங்கி இந்த கதையை என்னோட உட்கார்ந்து டெவலப் பண்ணினார்.
இப்படி அவரது போக்குக்கே போய் கோலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். பார்ப்போம், கோவை பயணம் பிரயோஜனமாக இருக்குமா என்று?
0 comments