
நடிகர் விஜய்யின் படு வேக அரசியல் பிரவேசம் பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. இந்த அரசியலுக்குப் பின் வேறு அரசியல் இருக்கிறதா என்ற கேள்வியும் கோலிவுட்டில் எழுந்துள்ளது.
சமீபகாலமாக விஜய் நடித்து வெளியான 3 படங்களும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவின. போக்கிரி படத்திற்குப் பின்னர் நடித்த அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு ஆகியவை மெகா தோல்விப் படங்கள்.
இத்தனைக்கு பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் இவை. அதிலும் குருவியை விஜய் நிறையவே எதிர்பார்த்திருந்தார். இப்படி அடுத்தடுத்து தோல்விப் படங்களாக அமைந்ததால் அப்செட் ஆகியுள்ள விஜய் தற்போது நடித்து வரும் வேட்டைக்காரன் படத்தைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. ஏவி.எம்.பாலசுப்ரமணியம் தயாரிக்கிறார். அனுஷ்கா விஜய்யுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக்கியே தீர வேண்டிய கட்டாயம் விஜய்க்கு. இதற்காக அவரும் மெனக்கெட்டு உழைத்து வருகிறார்.
வேட்டைக்காரன் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில் படத்தை வெற்றிப் படமாக்கத்தான் விஜய் இப்படி அரசியல், கட்சி என இறங்கியுள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினால் படத்துக்கு வலு சேர்க்கும் என்ற சில நடிகர் களின் பழைய யுக்தியை விஜய்யும் கையில் எடுத்திருப்பதாக கோலிவுட்டில் பேசுகின்றனர்.
அரசியல் என்பது பெரும் கடல். எனவே நிதானமாக, யோசித்து அடியெடுத்து வைப்பேன் என்று ஓரிரு நாட்களுக்கு முன்புதான் விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில் படு வேகமாக அவரது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் வெளியாவதை வேட்டைக்காரனுடன் முடிச்சு போடுகிறார்கள்.
0 comments