
தமிழ்சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர்களில் மிக முக்கியமானவர் கே.டி.குஞ்சுமோன். டைரக்டர் ஷங்கரை அறிமுகப்படுத்தியவரும் இவரே! சில வருடங்கள் ஒதுங்கியிருந்தவர் மீண்டும் அதே பிரமாண்டத்தோடு வந்திருக்கிறார். 'காதலுக்கு மரணமில்லை'. இதுதான் குஞ்சுமோன் தயாரிக்கும் லேட்டஸ்ட் படம். ஆச்சர்யம் என்னவென்றால் இவர் பிஸியான தயாரிப்பாளராக இருந்தபோது இந்த கதையை சொன்னாராம் டைரக்டர் பாலாஜி. "இந்த கதையை படமாக்குகிறோம்" என்று உத்தரவாதம் கொடுத்த குஞ்சுமோன் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். இந்த ஒரு செய்தி போதும், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு தயாரிப்பாளரா என்று வியப்பதற்கு!
பெங்களுரை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் தேஜா என்ற இளைஞர்தான் இப்படத்தின் ஹீரோ. மீராநந்தன், மடாலிஷா ஷர்மா ஆகியோர் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய எல்லாருமே கே.டி.குஞ்சுமோனின் மறு பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, தனக்கேயுரிய கம்பீரத்தோடு மைக்கை பிடித்தார் இந்த மீசைக்காரர். என்னோட 32 வருஷ சினிமா வாழ்க்கையில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் மாதிரி பார்த்ததில்லே, கேட்டதில்லே. இதுக்காகவே ரிப்பீட் ஆடியன்ஸ் வருவாங்க என்றார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் அவர் வீசிய ஒரு சாட்டை சொடுக்!
இசையமைப்பாளர் பரத்வாஜ் எந்த படமும் இல்லாமல் வீட்டிலே உட்கார்ந்திருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை கொடுத்தேன். ஆனால் இந்த பிரஸ்மீட்டுக்கு கூப்பிட்டும் அவர் வரலே. அவருக்கு நன்றி என்றார்.
கூரையிலே சோறிருந்தால்தான் ஆயிரம் காக்கா!
0 comments