
எந்திரன் படம் முடிந்த பின்னர், அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று, அவரது அண்ணன் சத்திய நாராயண ராவ் திருச்சியில் நேற்று கூறினார்.
ரஜினி ரசிகர் மன்ற தலைவர் இல்லத் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணா நேற்று திருச்சி வந்தார். சிதம்பரம் பகுதி தலைமை ரசிகர் மன்றத்தினர் தயாரித்த ‘மக்கள் மனம் கவர்ந்த மன்னன்’ என்ற ரஜினி திரைப்படங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டி.யை அவர் வெளியிட, கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சந்திரகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர், நிருபர்களிடம் சத்திய நாராயணா கூறுகையில், ‘‘ரசிகர் மன்ற நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தவில்லை. ரஜினியின் முழு கவனமும் இப்போது எந்திரன் படத்தில்தான் உள்ளது. அதன்பிறகு, அவர் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பார்’’ என்றார். ‘எனது அண்ணன்தான் எனக்கு காட்பாதர் என்று ரஜினி ஒரு முறை கூறியுள்ளார், அவர் அரசியலுக்கு வருவது குறித்து நீங்கள் ஏதாவது அறிவுரை கூறியிருக்கிறீர்களா’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எதுவாக இருந்தாலும், எந்திரன் படம் முடிந்த பின்னர் சரியான நேரத்தில், சரியான அறிவிப்பை ரஜினி வெளியிடுவார்’ என்றார் சத்திய நாராயணா.
0 comments